Star15. தமிழ் வலையுலகம் பற்றி ஒரு கேள்வி - பல பதில்கள்!
எனது மற்ற நட்சத்திர வாரப் பதிவுகளை இங்கு சென்று வாசிக்கவும்
அவற்றை வாசித்த பின்னரே இப்பதிவைத் தொடர வேண்டும் என்றெல்லாம் கட்டாயப்படுத்தினாலும் நீங்கள் அதைக் கேட்க மாட்டீர்கள் என்பது எனக்குத் தெரியாதா என்ன ? சொல்றதை சொல்லி வைக்கலாம்னு தான் :))))
***********************************
எனக்குப் பரிச்சயம் உள்ள, நீண்ட நாள் வலை பதிந்து வரும் நண்பர்களுக்கு ஒரு கேள்வியை மடலில் அனுப்பி அவர்களின் கருத்தை கேட்டிருந்தேன். சிலர் கருத்து கூறினார்கள். சிலரிடமிருந்து ரெஸ்பான்ஸ் இல்லை (நேரமின்மையோ அல்லது, எதிர்மறையான கருத்துகளை சொல்ல வேண்டாம் என்ற எண்ணமோ, தெரியவில்லை!). சிலர் ரத்தினச் சுருக்கமாகவும், சிலர் கொஞ்சம் விளக்கமாகவும், பாஸ்டன் பாலா சற்று நீளமான, சுவாரசியமான பதிலாகவும் தங்கள் கருத்துகளாக பகிர்ந்து கொண்டதை தொகுத்து இப்பதிவில் தந்துள்ளேன்.
நான் கேட்ட கேள்வி இது தான்:
தமிழ்மணம் சேவை தொடங்கி கிட்டத்தட்ட மூன்றரை ஆண்டுகள் ஆகி விட்ட நிலையில், தமிழ் வலைப்பதிவுலகில் ஏற்பட்ட ஒரு முக்கியமான அல்லது குறிப்பிடத்தக்க விஷயமாக அல்லது வளர்ச்சியாக நீங்கள் எதைக் கருதுகிறீர்கள் ? (வீழ்ச்சி பற்றி நேரடியாக கேட்காமல், பதில் தந்தவர்கள் தாமாகவே கூறினால் கூறட்டும் என்று விட்டு விட்டேன்:))
பதிவுலக நண்பர்களின் கருத்துகள் கீழே, வாசகர்களும் தாங்கள் தமிழ் வலைப்பதிவுலகின் (தமிழ்மணம் சார்ந்த அல்லது சாராத) வளர்ச்சியாக / வீழ்ச்சியாக கருதும் விஷயங்களை பின்னூட்டமாக இடலாம்.
******************************
எல்லா விஷயங்களிலும் தனக்கென ஒரு கருத்து வைத்திருக்கும் செல்வன் கூறியது கீழே:
இரண்டு வருடமாக டெக்னிகல் ரீதியில் பதிவுலகில் நல்ல முன்னேற்றம் தெரிகிறது. பதிவர்களின் எழுத்து தரத்தில் பெரிதாக எந்த முன்னேற்றமும் தெரியவில்லை. சில ஸ்பெஷல் இன்ட்ரஸ்ட் குழுக்கள் தமது கொள்கைகளை பரப்ப இணையத்தை நன்கு பயன்படுத்திக் கொள்கின்றன.
செல்வன்
http://holyox.blogspot.com
******************************
வெகுஜன ஊடகங்களால் பூசி மெழுகப்படும் விஷயங்களை படிக்க முடிவதும், உடனுக்குடன் எழுப்பப்படும் (மட்டுறுத்தப்படாத) எதிர்வினைகளும் ஒரு பெரும் வளர்ச்சி தான்.
RR
******************************************
"வளர்ச்சியாக மட்டும்" தான் கருதுவது பற்றி ஜெயஸ்ரீ (http://mykitchenpitch.wordpress.com/):
பதிவர்கள்: வலைப்பதிவுகளின் எகிறியிருக்கும் எண்ணிக்கை மற்றும் எழுதுபவர்களுக்கு எந்தத் துறை அல்லது தளத்தில் எழுதினாலும் வாசகர்கள் கிடைப்பார்கள் என்ற நம்பிக்கையும் தூண்டுதலும்....
வாசகர்கள்: தெரிந்த நண்பர்களின் பதிவை மட்டும், அவர்கள் என்ன எழுதியிருந்தாலும் :) படித்துக் கொண்டிருந்த வேளையில், என்ன எழுதியிருப்பார்கள் என்று தெரிந்துவைத்துக் கொண்டு படிக்கவும் விலக்கவும், புதிது புதிதாக வலைப்பதிவர்களை அறிமுகப்படுத்தியதும், பிற ஊடகங்களில் கிடைக்காத புதிது புதிதான தளங்களை, விபரங்களை, வன்மையான எழுத்தை, வாதங்களை, விமர்சனங்களை என்னைப் போல் வாழைப்பழச் சோம்பேறி மற்றும் நேர நெருக்கடியில் இருப்பவர்களும், விரல் சொடுக்கலில் வாசிக்க வசதிசெய்து தந்ததும்...
*************************************************
வலைப்பதிவுலகில் எனக்கு ஆரம்பத்தில் அறிமுகமான நண்பர்களில் (சிலரில்) ஒருவரான "பிருந்தாவனம்" கோபி கூறியது:
பதிவர் பட்டறைகளும் அவற்றை தொடர்ந்து புதிதாய் பதிய வந்த பதிவர்களையும் தான் நான் தமிழ் வலைப்பதிவுலகின் குறிப்பிடத்தக்க வளர்ச்சியாக கருதுகிறேன். நுட்ப ரீதியாக நிழற்படம் ஒலி/ஒளித்துண்டு கொண்ட வலைப்பதிவுகள், (பங்குசந்தை முதலான) துறைசார்ந்த வலைப்பதிவுகள் அதிகரித்திருப்பதும் முக்கியமான வளர்ச்சியாக கருதலாம்.
ப்ரியமுடன்,
கோபி
http://higopi.blogspot.com
*****************************************
நண்பர் ஹரிஹரனின் கருத்து:
எனது ஒன்றரை ஆண்டு வலைப்பூ அனுபவத்தில் தமிழ் மண சேவையில் (திரட்டியில்) பிராமணர்களை வசைபாடும், இந்திய தேசியத்தை எதிர்க்கும், ஈழப்புலிகள், கம்யூனிச ஆதரவுக்குரல்களை பிரதிபலிக்கும் பதிவுகள் பிரதானமாக இடம் பெறுவதை காண முடிந்தது.
அன்புடன்
ஹரிஹரன்
http://harimakesh.blogspot.com/
**********************************************
ஐகாரஸ் பிரகாஷ் content generation-ஐ முக்கிய வளர்ச்சியாக கருதுகிறார்! அதாவது,
வலைப்பதிவுகள் மூலமாக உருவாக்கப்பட்ட, உருவாக்கப்படும் லட்சக்கணக்கிலான தமிழ் இணையப்பக்கங்கள். வலைப்பதிவுகள் இல்லாவிட்டால், இவ்வளவு குறைந்த காலகட்டத்தில்இதற்கு சாத்தியமே இல்லை
-பிரகாஷ்
*******************************************
இன்று வலைப்பதிவுகளின் எண்ணிக்கை பெருகியதற்கு முக்கியக் காரணியாய் நான் கருதும் தமிழ்மணச் சேவையைத் தொடங்கியவரும், சக-GCTian-ம் ஆன காசி, 6 பாயிண்டுகளை சொல்லி விட்டு, 'அவ்வளவு தான்' என்கிறார் :)
1. வலைப்பதிவர்களுக்குக் குறைந்த பட்ச கவனம் கிடைக்கச் செய்திருப்பதால் பலரும் வலைப்பதியத் தூண்டுகோலாய் இருக்கிறது.
2. வலை உலாவர்களிடையே வலைப்பதிவுகள் குறித்து அறிய வைக்கிறது.
3. வைய விரிவு வலையில் தமிழ்ப்பக்கங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்கிறது.
4. பொதுப்புத்தியோடு ஒட்ட ஒழுகாத பதிவுகளுக்கும் வாசக வட்டம் கிடைக்கச் செய்கிறது.
5. மீடியா மாபியாவுக்குக் கட்டுப்படாத ஒரு மேடையைத் தமிழ் வாசகர்களுக்கு அளிக்கிறது.
6. தமிழ் யுனிகோடு பரவலாக்கத்தை விரைவுபடுத்துகிறது.
அன்புடன்,
-காசி
*************************************************
சென்ற வருடம், சிறந்த தமிழ் வலைப்பதிவுக்காக Indibloggies விருது பெற்ற அருமை நண்பர் பெனாத்தலாரின் short & sweet கருத்து :)
குறிப்பிடத்தக்க வளர்ச்சி என்று எதுவும் உடனே தோன்றவில்லை. பலபேர் பதிய வந்ததும், மாற்று ஊடகமாக வலைப்பதிவுகள் - குறைந்தபட்சம் பதிபவர்களால் - கருதப்படுவதைச் சொல்லலாம். பலரின் (நான் உள்பட) எழுத்தாசையைத் தணித்ததைச் சொல்லலாம். அச்சு ஊடகங்களாலும் கவனிக்கப்படுவதைச் சொல்லலாம். ஆனால் எதுவும் முழுமையாக இல்லை என்பதே உண்மை.
வீழ்ச்சி என நிறையவே சொல்லலாம் :-(((((((
பெனாத்தல் சுரேஷ்
http://penathal.blogspot.com
(ஆனால் வீழ்ச்சி என்று தான் கருதுவதை சுரேஷ் பகிர்ந்து கொள்ளாததில் அரசியல் எதுவும் இல்லை என்று நான் நம்புகிறேன்;-))
**********************************************
தன்னை பிரபலமாக்கியதில் தமிழ்மணத்திற்கு பெரும் பங்குண்டு என்பதை 'பெருந்தன்மையோடு' டோண்டு சார் ஒப்புக் கொண்டுள்ளார் ;-)
ஒரேயடியாகத் தேங்கிப் போகாமல் நிகழ்ச்சிகளுக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொண்டு இன்னமும் தமிழ் பதிவர் உலகின் மிக முக்கியமான அங்கமாகச் செயல்படுவதையே தமிழ் மணத்தின் மிக முக்கிய சிறப்பாகக் கருதுகிறேன்.
என் பதிவுக்கு பல இடங்களிலிருந்து விசிட்டர்கள் வந்தாலும் தமிழ் மணத்திலிருந்து வருபவர்களது எண்ணிக்கை மிக அதிக அளவில் உயர்ந்த இடத்தில் உள்ளது. அதற்கு பின்னால் இரண்டாவதாக வருவது ரொம்ப தூரத்தில் உள்ள இரண்டாவது இடத்தில்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
http://dondu.blogspot.com
***********************************************
நண்பர் ஆசாதின் கருத்து:
1. கட்டற்ற சுதந்திரத்துடன் முன்வைக்கப்படும் கருத்துகள் பெருவாரியான வாசகர்களைச் சென்றடைவது.
2. பதிவர் தன்னை அடையாளம் காட்டிக்கொள்ள விரும்பும் பட்சத்தில்,
யாரையும் சந்திக்காமலே தனது எழுத்துகளின் மூலமாக தனது ஆளுமையை மேற்சொன்ன குறிப்பிட்ட வாசகர்களுக்கு உணர்த்துவது.
அன்புடன்
ஆசாத் (அபுல் கலாம்)
****************************
வலை பதிவதிலிருந்து ஒரு தற்காலிக பிரேக் எடுத்துக்கொண்டிருக்கும் ரோசா வசந்த், தனது கருத்தை அனுப்பியிருந்தார்:
உங்களின் குறிப்பிட்ட கேள்விக்கு குறிப்பிட்ட ஒரு பதிலை என்னால் தர முடியவில்லை. ஏற்கனவே எனது பதிவு ஒன்றில் குறிப்பிட்டபடி,
தினமும் நூற்றுக்கு மேற்பட்ட பதிவுகள் வருவதும், ஒரு ஆயிரம் பேர்கள் தங்களுக்கு என்ற தனித்தன்மையுடன் கருத்து தெரிவிப்பதும், என்னவிஷயம் எழுதினாலும் அது விவகாரமாகி அது குறித்து பல வகையான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு தினமும் ஒரு விவாதம்
நடப்பதுவும் எல்லாமே நல்ல விஷயமாக குறிப்பிடத் தகுந்ததாகவே எனக்கு தெரிகிறது.
ஆனால் இவை எல்லாம் (எனது பார்வையில்) ஆரோக்கியமான முறையில் நடக்கிறதா என்று கேட்டால் எதிர்மறையாகத் தான் பதில் சொல்ல வேண்டும். ஆனால் இதுவும் முன் இருந்த நிலையை விட முன்னேறிய வளர்ச்சியாகத் தான் என்னால் பார்க்க முடிகிறது. வேறு ஒரு இடத்தில் சொன்னது போல், ஒரு அழுகிய சூழலிலிருந்து ஆரோக்கியமற்ற ஒரு சூழலுக்கு வந்திருப்பதாக எனக்கு தோன்றுகிறது.
அன்புள்ள
வசந்த்.
***********************************
டீச்சர் எப்போதும் போல பாலிஷாக பதில் கொடுத்துள்ளார் :)
வெகுஜன ஊடகங்களுக்கு மாற்றாகத்தான் இப்போது பல
வலைப்பதிவுகள் வந்து கொண்டிருக்கின்றன. மதம், மனிதம், இலக்கியம், நாட்டு நடப்பு என்று பலவிதமான விஷயங்களில் உலகின் பல்வேறு பாகங்களில் இருக்கும் நண்பர்களுடன் ஆரோக்கியமான கருத்துப் பரிமாற்றங்கள் நடப்பதும், அவைகளைப் படிப்பதும் மனதுக்கு நிறைவாகவே இருக்கின்றது.
நட்பு வட்டமும் பெருகி வருகின்றது, நல்லது தானே?
என்றும் அன்புடன்,
துளசி
**********************
நிறைந்த வாசிப்பனுபவம் உள்ள Ravi Srinivas கூறுவது:
In my view the sheer no. of tamil bloggers is an important development and தமிழ்மணம் has played an important role in this. But in terms of content tamil blogging has a long way to go.
This is my humble opinion.
thanks for remembering me and for asking.
cheers
ravi srinivas
http://ravisrinivas.blogspot.com
***************************
எழுத்தாளர் மேடம் கருத்து:
பலர் மிக சுவாரசியமாகவும், நல்ல விஷய ஞானம் உடையவர்களாகவும் இருக்கிறார்கள். இவ்வருடத்திய
புதுமுகம் என்ற கண்ணோட்டத்தில் ஜமாலன், நந்தா, வவ்வால், ஆடுமாடு, ரத்னேஷ் (ஞாபகத்தில்
எழுதுகிறேன்) நன்றாக எழுதுகிறார்கள். (ஜமாலன் மற்றும் ரத்னேஷ் அச்சு பத்திரிக்கைகளில் எழுதிக்
கொண்டிருந்தவர்கள் என்று நினைக்கிறேன்). சிறப்பு அம்சமாய் நினைப்பது, புகைப்படம் எடுக்க சொல்லிக்
கொடுக்கும் கூட்டு வலைப்பதிவு.
தமிழில் இது புது முயற்சி. சில சூட்சுமங்களை சொல்லிக் கொடுப்பதும், பலரும் போட்டிகளில்
ஆர்வத்துடன் பங்கெடுப்பது அக்கூட்டு வலைப்பதிவின் வெற்றியைக் காட்டுகிறது.
--- ராமச்சந்திரன் உஷா
http://nunippul.blogspot.com
**********************************
தமிழிலும் ஆங்கிலத்திலும் நீண்ட நாளாக வலை பதிபவரும், பிரபல பத்திரிகையாளரும் ஆன Aruna Srinivasan அவர்களின் கருத்து:
ஆரம்பித்த நிலையிலிருந்து பார்த்தால் தமிழ் வலைப்பதிவுகளின் எண்ணிக்கக கணிசமாக அதிகரித்துள்ளது ஒரு நல்ல விஷயம். பெருமளவில் இல்லாவிட்டாலும்,பதிவுகள் ஓரளவு மாற்று ஊடகத் தன்மையை பெற்றுக்கொண்டிருக்கின்றன என்றே தோன்றுகிறது. எழுத்து என்றால் ஏதோ எட்டாத கொம்பு என்ற பயம் /தயக்கம் இருக்கும் பலரும் இன்று ஆர்வமாக தயக்கம் இன்றி எழுத முன் வந்துள்ளது ஒரு பெரிய தாக்கம். எழுத்து செறிவுக்கு - பலவித எண்ணங்களுக்கு - பகிர்தலுக்கு நிச்சயம் வலைப்பதிவுகள் ஒரு பாதை வகுத்துள்ளன. ஆனால் எதிர்பார்த்த விதத்தில் இன்னும் பன்முனை பொருள் / அடக்கம் மிகுந்த பதிவுகள் அதிகரிக்கவில்லை.
என் கருத்தை அறிய முற்பட்டதற்கு மிக்க நன்றி.
அன்புடன்
அருணா
********************************
பி.கு: பாஸ்டான் பாலாவின் பதிலை (நீளம் காரணமாக) தனிப்பதிவாக இட உத்தேசித்துள்ளேன்.
எ. அ. பாலா
29 மறுமொழிகள்:
Test !
Usha,
The blogger you are referring to is not "Ratheesh", he is "RATHNESH" and he is GOOD :)
எ.எ.அ.பாலா,
//புதுமுகம் என்ற கண்ணோட்டத்தில் ஜமாலன், நந்தா, வவ்வால், ஆடுமாடு, ரத்தீஷ் (ஞாபகத்தில்
எழுதுகிறேன்) நன்றாக எழுதுகிறார்கள்.//
முதலில் நன்றியை சொல்லிவிடுவோம், நன்றி உஷா(என் பதிவுகளைப்படிக்காமலே சான்று தந்துட்டிங்கனு நினைக்கிறேன் :-)) )
நானும் 2 வருடமா பதிவுப்போட்டுக்கிட்டு இருக்கேன், 3 வருடமா கடைசி பெஞ்சில இருந்து பதிவை மட்டும் படிச்சுக்கிட்டு இருக்கேன் ஆனாலும் எனக்கும் புது முகம்னு பேரு :-))
மற்றவர்கள் கருத்துக்கு எதுவும் சொல்ல விரும்பவில்லை, தமிழ்மணத்தின் பிதா காசியின் கூற்றுகள் பல பாதியளவில் சரியாக இருக்கு, ஆனால் அவர் சரியான புள்ளிகளை தொட்டுக்காட்டியுள்ளார்!
//4. பொதுப்புத்தியோடு ஒட்ட ஒழுகாத பதிவுகளுக்கும் வாசக வட்டம் கிடைக்கச் செய்கிறது.//
இதுக்கண்டிப்பாக கொஞ்சம் ஒத்துப்போகாத ஒன்று, பொதுப்புத்தியோடு அல்லது குழு மனப்பாண்மை இல்லாமல் வாசக வட்டம் இங்கே உருவாவது இல்லை.
ஒரு நாளு பதிவு போட்டதும், மாயவரத்துக்காரர்களே வருக, கும்பகோணத்துகாரர்களே வருக, மதுரைக்காரர்களே, வருக, கோவை காரர்களே வருகனு ஒரு குழுவையோ அல்லது, ஏதேனும் ஒரு சப்பைக்காரணத்தை வைத்து ஒரு குழுவோ உருவாக்கி, அதுக்கு(அவர்களுக்கு) என்று ஒரு வாசக வட்டம் உருவாக்கிக்கொள்கிறார்கள். அப்படி இல்லை எனில் அவர்களை யாரும் திரும்பிப்பார்க்க மாட்டார்கள் என்று அவர்களுக்கே ஒரு பயம்!
எனவே இங்கேயும் எப்போதும் போல பொது புத்தியோடு ஒட்டாமல் இருப்பவர்களுக்கு கிடைப்பது வழக்கம் போல கொய்யாக்கா தான்!
திண்ணைப்பேச்சு பேசுவதில் தமிழர்களுக்கு விருப்பம் அதிகம், இணையத்தில் அப்படி ஒரு திண்ணை தான் தமிழ் மணம் அதில் வந்து எல்லாம் உட்கார்ந்து அவங்க ஆர்வத்துக்கு தக்க ஆளுங்களை கூப்பிட்டுகிட்டு போய் ஒரு குழுவா ஒதுங்கிக்கொள்கிறார்கள்!
இதெல்லாம் தவறென்று சொல்லவில்லை, நடைமுறையில் என்ன செய்வார்களோ அதையே தான் இணையத்திலும் செய்கிறார்கள், எனவே புதுமை, புரட்சிலாம் இங்கே இல்லை என்பதே நிதர்சனம்!
இங்கே தமிழ்மணத்தை நான் குறையாக எதுவும் சொல்லவில்லை, இணைய வெளி மக்களை சொல்கிறேன். தமிழ்மணம் ஒரு கருவி தானே! அதன் பணி இன்னும் முழுமை அடையவில்லை என்றே சொல்வேன்! ஆனால் இது வரை செய்து இருப்பதே ஒரு சாதனை தான்!( என்ன சாதனைனு எனக்கு தெரியலை ஆனால் சாதனை)
//மீடியா மாபியாவுக்குக் கட்டுப்படாத ஒரு மேடையைத் தமிழ் வாசகர்களுக்கு அளிக்கிறது.//
இங்கே பலரும் அந்த மீடியா மாபியாவின் செய்திகளை காபி & பேஸ்ட் செய்து அதே கருத்து திணிப்பை தான் செய்கிறார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும் :-)) எனவே மீடியா மாபியாவின் கரங்கள் இங்கேவும் பரவிவிட்டது!
//கட்டற்ற சுதந்திரத்துடன் முன்வைக்கப்படும் கருத்துகள் பெருவாரியான வாசகர்களைச் சென்றடைவது.//
ஆசாத் சொல்கிறார் கட்டற்ற சுதந்திரம் என்று, எல்லாம் மறுமொழி மட்டுறுத்தல் என்று வைத்துக்கொண்டு, அவர்களுக்கு ஒவ்வாத எதாவது வந்தால் சத்தம் போடாமல் அமுக்கி விடுகிறார்கள்.ஒவ்வொரு முறையும் நான் கமெண்ட் போட்டேனே ஏன் போடலைனு சட்டை காலரை புடித்தா கேட்க முடியும். எனவே கட்டற்ர சுதந்திரம் எல்லாம் யாரும் தருவதில்லை, பயன் படுத்தவும் பயப்படுகிறார்கள்.
ஒரு மாற்றுக்கருத்தை காது கொடுத்து கேட்க கூட துணிவற்ற மக்கள் தான் இங்கே இருக்காங்க, எனவே கட்டற்ற சுதந்திரம் வர எல்லாம் இன்னும் காலம் ஆகும்!
//The blogger you are referring to is not "Ratheesh", he is "RATHNESH" and he is GOOD :)//
ரத்னேஷ் குறுகிய காலத்தில் பிரபலமடைந்துவிட்டார். நன்றாக எழுதுகிறார். அவர் தேர்ந்தெடுக்கும் அதிரடியான தலைப்புகள்தான் சில சமயம் நெருடுகின்றன.
தமிழ்மணம் எனக்கு அறிமுகமாகி ஒரு வருடம் ஆகப்போகிறது. எனக்குத்தெரிந்து குறைசொல்லும்படி எதுவும் இல்லை. ஹரிஹரன் சொன்ன குறைகளெல்லாம் தமிழ்மணத்தின் குறைகள் என்று எப்படி சொல்கிறார் என்று தெரியவில்லை.
வவ்வால் மன்னிக்கவும். கொஞ்சம் உடல் நலம் சரியில்லை. பத்து நிமிடத்துக்கு மேல் உட்கார முடிவதில்லை. அதனால்
ஏற்பட்ட குழப்பம்.
புரோஃபைல் பார்த்துவிட்டு பெயரை சேர்த்து இருக்க வேண்டும். நான் உங்களுடையதை எல்லாம் படிக்க ஆரம்பித்தது இந்த வருடத்தில்தான். பாலா, கேட்டதும் மறுக்கமுடியவில்லை. நினைவுக்கு வந்ததை சொல்லிவிட்டேன்.
பாலா, ரத்னேஷ் பெயரை எடிட் செய்து, சரியாய் போட்டுவிடவும்
நான் இரண்டு மாதமாக தான் தமிழ்மனத்தில் உலாவி வருகிறேன் ஓராண்டுக்கு முன்னரே வலையில் தேன்கூடு தமிழ்மணம் எல்லாம் பார்த்து இருக்கிறேன் அப்போதெல்லாம் தமிழ் இனையத்தை எப்படி பயன்படுத்துவது என்று எனக்கு எதுவும் தெறியாது பிளாக் என்றாலே என்ன என்று தெறியாது அதை எப்படி ஆரம்பிப்பது என்று செய்த சோதனையிலேயே ஒருமாதம் ஓடிவிட்டது தமிழ்மணம் ஓரலவு வளர்ச்சி அடைந்து தான் இருக்கிறது ஆனால் புதிதாக வரும் பதிவர்களுக்கு தெவையான வழிமுறைகள் கிடைக்காததே இதன் வளர்ச்சிக்கு பெரிய முட்டுக்கட்டையா இருக்கிறது என்று நினைக்கிறேன் ஆதம் ஓடை விரும்னத்தக்கதுஎன்று கூறுகிறார்கள் ஆனல் ஆதம் ஓடையை எப்படி அமைப்பது தமிழ் பான் டு களெல்லௌம் எப்படி பெறுவது போன்றதகவல்கள் இருந்தால் நன்றாக இருக்கும் பிளாக் மற்றும் தமிழ்மணம் எப்படி பயன்படுத்துவது என்ற ஒரு மாதிரி இருந்தால் அனைவருக்கும் நன்றாக இருக்கும் மற்ற தளங்கலை விட கொஞ்சம் சிறமமாகதான் இருக்கிறது
உதாரணத்திற்க்கு தமிழ்மண சேர்க்கை அளிப்பு நிலவரப்பட்டியலை தினமும் பாருங்கள் அதில் வந்து காணாமல் போகும் பதிவர்களெல்லம் செய்தி ஓடை எப்படி அமைப்பது என்று தெறியாத காரந்தினால் தான் கானாமல் போகிறார்கள் இது மென்பொருள் துறையில் இல்லதோர் மற்றும் மென்பொருள்துறை சார்ந்த நன்பர்களில்லாத காரனத்தினால் அவர்களால் பங்களிக்க இயலவில்லை
தமிழ் வலைப்பூக்களை பற்றி நான் 2004 அக்டோபரில் எதேச்சையாகத்தான் அறிந்தேன். நம்ம என்றென்றும் அன்புடன் பாலா அவர்களது திருவல்லிக்கேணி நினைவுகள் சக திருவல்லிக்கேணிவாசியான எனது உள்ளத்தைக் கவர்ந்தன. அதில் பின்னூட்டம் இடுவதற்கென்றே நான் பிளாக்கர் கணக்கு துவங்கினேன். பிறகு தமிழ் தட்டச்சு வந்தது. எனது பதிவுகள் தொடர்ந்தன.
ஆனால் அப்போதெல்லாம் ஒவ்வொரு வலைப்பூவாகத் தேடிப் போக வேண்டும். தமிழ் வலைப்பதிவர் பட்டியல் இருந்ததோ அந்த வேலை சற்று எளிமைப்படுத்தப்பட்டதோ. ஆனால் நான் உள்ளே வந்த சில நாட்களுக்குள் காசி அவர்களது தமிழ்மணம் எனது இந்த வேலையை சுலபமாக்கி விட்டது. அதன் பெருமையை நான் கூற விழைவது சொந்த சகோதரனிடம் ஒரு பெண் தன் பிறந்தகப் பெருமையைப் பேசுவதற்கு சமமாகும்.
ஆக முக்கியமான காரணம் இதுதான். பிறகு என்னென்ன திரட்டிகள் வந்தாலும் தமிழ் மணம் ஒரு தனியிடத்தை எனது மனதில் பிடித்துள்ளது. அதுவே நான் இங்கு இன்னும் விடாப்பிடியாக இருப்பதற்கு காரணம். அதற்காக தமிழ்மணம் அப்படியே ஒரு மேம்பாடும் பெறாமல் அப்படியே நின்று விடவில்லையே. எவ்வளவு புது வசதிகள் வந்துள்ளன? தமிழைத் தவிர வேறு எந்த மொழிப் பதிவுகளுக்கும் இம்மாதிரி ஏற்பாடு இல்லை என்று அடித்துக் கூறுவேன். எனக்கு ஆறு மொழிகள் தெரியும் என்பதையும் சைக்கிள் கேப்பில் கூறிவைக்கிறேன். அது பற்றிய விவரங்கள் இங்கே, ஹி ஹி ஹி.
இன்னொரு உண்மையையும் கூறுவேன். மொழிபெயர்ப்பு எனது உயிர். அதற்கு துணை போகும் எல்லாமே எனக்கு பிடிக்கும். அவற்றை உபயோகித்து கொள்ள தயங்க மாட்டேன். அந்த வரிசையில் தமிழ்மணத்துக்கு முக்கிய இடம் உண்டு. அதை உபயோகித்து பல பதிவுகள் பார்த்தேன், பின்னூட்டங்கள் இட்டேன், பதிவுகள் போட்டேன். எனது தமிழ் மேம்பட்டு வருகிறது. தமிழில் தட்டச்சு அனாயாசமாக வந்தது. அதற்கென காத்திருந்தது போலவே ஆங்கிலத்திலிருந்து தமிழ் மொழிபெயர்ப்பு வேலைகள் வர ஆரம்பித்தன. தற்சமயம் என்னுடைய மொத்தம் இரண்டு வெளி நாட்டு வாடிக்கையாளர்களுமே எனது தமிழ் மொழிபெயர்ப்பு மூலமாகத்தான் வந்துள்ளனர். தாய்மொழியில் எழுதும் சுகத்தை அனுபவிக்கிறேன். வேற்று மொழியிலிருந்து தாய் மொழிக்குத்தான் மொழிபெயர்க்க வேண்டும் என்ற வாதத்தின் பலத்தை நேரடியாக உணர்கிறேன். யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல இனிதாவது எங்கும் காணோம் என்ற கோஷத்தை உண்மையாக உணர்ந்து வைக்க முடிகிறது. எல்லாம் இருக்கும் இடத்திலேயே நடப்பதால் என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் என்றெல்லாம் பதிவு போட முடிகிறது.
பல மொழிபெயர்ப்பு வேலைகள் வருகின்றன என்பதும் உண்மைதானே. அவற்றில் பல நான் தமிழ்மணத்தில் செயலுடன் இருப்பதால்தான். இன்னொன்றையும் கூறவேண்டும். தமிழ் மணம் என்னை மிக நல்லபடியாகவே நடத்தி வந்திருக்கிறது. வளர்ந்த குழந்தையாக செயல்பட்டு (நன்றி மா.சிவகுமார் அவர்களே, பை தி வே அவரும் எனது வாடிக்கையாளர்தான் என்பதையும் சந்தடிசாக்கில் கூறிவிடுகிறேன்) பல சர்ச்சைகளை உருவாக்கி, படுத்தின/படுத்தும் டோண்டு ராகவனை இன்னும் தமிழ்மணம் சகித்துக் கொண்டிருப்பதே என்னை பிறந்த வீட்டில் ஒரு பெண்ணுக்கு கிடைக்கக் கூடிய பாதுகாப்பு உணர்ச்சியை அளிக்கிறது.
ஆனால் என் வீட்டம்மா வேறு ஒரு கோணத்தை முன்வைக்கிறார். "சண்டைக்கார பிறாம்மணா, எங்கே சண்டை, சோத்து மூட்டையை இறக்கு" என்ற சொலவடைக்கு ஏற்ப நான் செயல்படுகிறேனாம். அப்படியா இருக்கும்? சேச்சே. இருக்கவே இருக்காது. அவருக்கு என்ன தெரியும்? சமீபத்தில் 1953 முதல்தானே என்னை அவர் அறிவார்?
நான் என்றென்றும் அன்புடன் பாலாவுக்கு அளித்த பதிலுக்கு இவையெல்லாமே காரணம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
வவ்வால்,
வெளிப்படையான கருத்துக்கு நன்றி. ஆனால், நீங்கள் ஸ்டார் என்பதில் எனக்கும், உஷாவுக்கும் சந்தேகமில்லை :)
உமையணன்,
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
உஷா,
உடல் நலத்தை பார்த்துக் கொள்ளவும். ரத்னேஷின் பெயரை பதிவில் சரியாக போட்டு விட்டேன்!
புரட்சி தமிழன்,
வாங்க ! கருத்துக்கு மிக்க நன்றி. தமிழ்மணம் ஆவன செய்யும் என்று எதிர்பார்க்கிறேன்.
டோ ண்டு சார்,
நீண்ட பின்னூட்டத்திற்கு நன்றி.
இந்த மாதிரி சுட்டிகள் நிறைந்த பின்னூட்டம் விளம்பரத்திற்கு உதவும் தானே :)))
எ.அ.பாலா
உஷா,
//வவ்வால் மன்னிக்கவும். கொஞ்சம் உடல் நலம் சரியில்லை. பத்து நிமிடத்துக்கு மேல் உட்கார முடிவதில்லை. அதனால்
ஏற்பட்ட குழப்பம்.
புரோஃபைல் பார்த்துவிட்டு பெயரை சேர்த்து இருக்க வேண்டும். நான் உங்களுடையதை எல்லாம் படிக்க ஆரம்பித்தது இந்த வருடத்தில்தான். பாலா, கேட்டதும் மறுக்கமுடியவில்லை. நினைவுக்கு வந்ததை சொல்லிவிட்டேன்.//
இதில் மன்னிக்க என்று எல்லாம் கேட்க என்ன இருக்கு, நாமும் பல காலமாய் இருக்கோம், எல்லாம் புதுசுனு சொல்றாங்களே என்ற ஆதங்கத்தில் கேட்டு விட்டேன்!(நீங்க இப்போ தான் படித்தாலும் நான் அப்போல இருந்தே உங்கள் பதிவுகளை படித்து வருபவன், ஆனால் சமயம் கிடைத்தால் தான் பின்னூட்டம் போட்டு குண்டு வைப்பேன்)
மற்றப்படி , உங்களைப்போல யாராவது சொன்னால் தான் அடடே நாம கூட வித்தியாசமா வலைப்பதியரோமானு தெரிய வருது!(தமிழனுக்கு பாராட்டுவதில் கஞ்சத்தனம், நானே யாரையும் பாராட்ட மாட்டேன் , அப்புறம் என்ன என்னை மட்டும் பாராட்டுவாங்களானு எதிர்ப்பார்க்கிறது :-)) , உண்மைய மறைக்காம சொல்லிடுவோம்ல)
நான் எப்போதும் இரு வழிகளிலும் யோசிப்பேன் அதான், கொஞ்சம் சான்ஸ் கிடைச்சா யாரா இருந்தாலும் ஓட்டி விடுவேன்!
நீங்க சொன்னதில் தவறு இல்லை, எல்லாருக்கும் எல்லாரையும் தெரிந்து இருக்குமா என்ன?
பாலா சார்,
வணக்கம்...கொஞ்ச நாளா வேலை பளுவினால் இந்தப் பக்கம் வரமுடியவில்லை..வந்து பார்த்தால் நீங்கள் தான் நட்சத்திரப் பதிவராமே இந்த வாரத்திற்கு...வாழ்த்துக்கள் :)
நட்சத்திர வாரத்தில நம்மளையெல்லாம் கண்டுக்குவீங்களா என்ன ? :)
குறைந்த பட்சம் தமிழ் வலைப் பதிவுகள் / பதிவுலகம் பற்றி நம்ம கிட்டையும் கேக்கக் கூடாதா ? நாங்களும் நாலு கருத்து சொல்லுவோமுல்ல?:0
நட்சத்திரப் பதிவரானதுக்கு மீண்டும் வாழ்த்துக்கள்
கி அ அ அனானி
அப்புறம் ஏதோ ஒரு பதிவில் பின்னூட்டத்தில் நம்மளைப் பற்றி குறிப்பிட்டிருந்த உஷா அவர்கள், மறை முகமாக நம்ம விசாரித்த இலவசக்கொத்தனார் (என்னைத்தான் விசாரித்தாரா தெரியாது....சும்மா போட்டுக்க வேண்டியதுதான் :)) அல்லாருக்கும் டாங்ஸ்ஸுங்கோவ்.
கி அ அ அனானி
கி.அ.அ.அனானி,
வாங்க, வாங்க :)
இவ்வாரம் உங்கள் பதிவு போட்டால் நான் அம்பேல் ;-)
அதனால், அந்த வம்பே வேண்டாம் :)
வவ்வால்,
//எனவே இங்கேயும் எப்போதும் போல பொது புத்தியோடு ஒட்டாமல் இருப்பவர்களுக்கு கிடைப்பது வழக்கம் போல கொய்யாக்கா தான்!//
பழம் தின்னி வவ்வால் என்று கேள்விப்பட்டிருக்கிறேன், பரவாயில்லை, கொய்யாய்க்*காய்* கிடைத்தாலும் சமாளித்துகொள்ளுங்கள்:-))
என் பார்வையில் இந்த விசயத்தில் மூன்று நிலைகளிருக்கின்றன. பொது புத்தியோடு ஒட்டாமல் இருப்பவர்களுக்கு(=பொ.பு.ஒ.) அவர்கள் சொல்லவருவதை வெளிப்படுத்துவதற்கே வழியில்லாதது முதல் நிலை. உதாரணமாக 'சன் டிவியில் மக்கள் பிரச்னை தொடர்பான ஒரு வெளிப்படையான விவாதத்தைப் பார்க்கமுடிவதில்லை' என்பது போன்ற நிலை. அங்கே அழுகாச்சி சிரியல்களும், சினிமாவும்தான் போணியாகிறது. அவைகளுக்குத்தான் இடம். இதற்கு அடுத்த கட்டமாக மக்கள் டிவி போல 'சினிமாவைத் தவிர்த்த, பொதுமக்களுக்கு பயனாகும் நிகழ்ச்சிகள் இடம்பெறுவது போன்றது' இரண்டாம் நிலை. மூன்றாம் நிலை, 'மக்கள் டிவிக்கும் சன் டிவி அளவுக்கு வரவேற்பும் (வியாபாரமும், அதன்மூலம் வளர்ச்சியும் நேர்த்தியும் அடைதலும்) கிடைப்பது' போன்ற நிலை. இது நடைமுறை உலகில் சாத்தியமா? உடோபியன் கனவல்லவா நாம் காண்பது?
அதைப் போலவே பொ.பு.ஒ. கருத்துக்களுக்கு அவற்றை வெளியிடவே வெளி கிடைக்காத நிலை ஒரு நிலை. வலைப்பதிவுகளின் வரவுக்குப்பின் அவற்றை வெளியிட, *ஆர்வமுள்ள* சிலருக்காவது கொண்டுசேர்க்க, ஒரு வழி கிடைத்திருக்கிறது என்பதே நான் சொல்ல வருவது. கும்மிகளும் மொக்கைகளும் ஜல்லிகளும் நிறைந்த சபையில் அவைகளுக்குக் கிடைக்கும் அதே வரவேற்பு பொ.பு.ஒ. பதிவுகளுக்கும் கிடைக்கவேண்டும் என்று சொன்னால் நடைமுறையில் சாத்தியமில்லாத ஒன்றைப் பற்றிப் பேசுவதாகத்தான் அர்த்தம்!
//புதுமை, புரட்சிலாம் இங்கே இல்லை என்பதே நிதர்சனம்!// புதுமை இருக்கிறது. புரட்சி இல்லை. இன்றுள்ள இணையப் பயனாளர் ப்ரொபைலை வைத்துப்பார்த்தால் அதற்கு இங்கே இடமுமில்லை.
//ஆனால் இது வரை செய்து இருப்பதே ஒரு சாதனை தான்!( என்ன சாதனைனு எனக்கு தெரியலை ஆனால் சாதனை)//
சிரித்துவிட்டேன். :-)
//இங்கே பலரும் அந்த மீடியா மாபியாவின் செய்திகளை காபி & பேஸ்ட் செய்து அதே கருத்து திணிப்பை தான் செய்கிறார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும் :-)) எனவே மீடியா மாபியாவின் கரங்கள் இங்கேவும் பரவிவிட்டது!//
குறைந்த பட்சம் மறுத்து எழுதவாவது ஒரு வாய்ப்புக் கிடைக்கிறது. இப்போதைக்கு அதுதான் பலன். எதிர்காலத்தில் எப்படி என்று தெரியவில்லை.
//ஆசாத் சொல்கிறார் கட்டற்ற சுதந்திரம் என்று, எல்லாம் மறுமொழி மட்டுறுத்தல் என்று வைத்துக்கொண்டு, அவர்களுக்கு ஒவ்வாத எதாவது வந்தால் சத்தம் போடாமல் அமுக்கி விடுகிறார்கள்.ஒவ்வொரு முறையும் நான் கமெண்ட் போட்டேனே ஏன் போடலைனு சட்டை காலரை புடித்தா கேட்க முடியும். எனவே கட்டற்ர சுதந்திரம் எல்லாம் யாரும் தருவதில்லை, பயன் படுத்தவும் பயப்படுகிறார்கள்.//
மிகவும் உண்மை. வெளியுலகில் நாம் காணும் பாசாங்குக்கு சற்றும் குறைந்ததில்லை இங்கே உலவும் மக்களுடையது என்பது எனக்கும் கொஞ்சம் தாமதமாகத்தான் புரிந்தது.
//ஒரு மாற்றுக்கருத்தை காது கொடுத்து கேட்க கூட துணிவற்ற மக்கள் தான் இங்கே இருக்காங்க, எனவே கட்டற்ற சுதந்திரம் வர எல்லாம் இன்னும் காலம் ஆகும்!//
இது ரொம்பவும் விரக்தியான சொல். முழுக்க கட்டற்ற சுதந்திரம் எந்நாளும் வரும் என்று நான் நம்பவில்லை.
பாலா கலக்கலான நட்சத்திரப் பதிவுகளுக்கு வாழ்த்துக்கள். ரெம்ப நாளா பதிவுகள் பக்கமே வரல. (அதனாலேயோ என்னவோ உங்க கேள்வி குறித்து எந்த பதிலுமே தோணல)
:))
மூன்று வருடமாக வலை பதியும் வவ்வால் புதுமுகம் என்றால் மூன்று மாதமாக வலை பதியும் நாமெல்லாம் எங்க!?!?!
தமிழ்மணத்தால் நல்ல நட்பு வட்டம் கிடைத்திருக்கிறது.
காசி,
உங்கள் மீது எனக்கு தனிப்பட்ட அளவில் நிரம்ப மரியாதை உண்டு, மீண்டும் அதனை மெய்ப்பித்துள்ளீர்கள்!(தமிழ் மணத்தின் மீதான விமர்சனமாக நான் சொல்லவில்லை, அதன் பயனர்களின் செயல்பாட்டை தான் சொல்ல வந்தேன், தமிழ் மணம் என்பது தீக்குச்சி எனில் அதைக்கொண்டு விளக்கு ஏற்றலாம் ,வீட்டையும் பற்ற வைக்கலாம் தானே, எனவே கேள்விகள் வலைப்பதிவர்கள் மீது தான்) ஏன் எனில் முன்னர் நீங்கள் சொன்னதும் சரியான புள்ளிகளை தொட்டது, ஆனால் ஆங்காங்கே எனக்கு இடறல் என்பதால் தான் , ஒரு மாற்றுக்கருத்து சொன்னேன், மீண்டும் நீங்கள் சொன்னதும் சரியானதே!
//பரவாயில்லை, கொய்யாய்க்*காய்* கிடைத்தாலும் சமாளித்துகொள்ளுங்கள்:-))//
கனி இருப்ப காய் கவர்தல் சரி அல்லனு அய்யன் வள்ளுவர் சொல்லி இருப்பதால் கனி கிடைக்குமானு பார்த்தேன் :-))
//இது நடைமுறை உலகில் சாத்தியமா? உடோபியன் கனவல்லவா நாம் காண்பது?//
கொஞ்சம் அதிகம் ஆசைப்பட்டு விட்டேன், இதற்கு தானா ஆசைப்பட்டாய் நந்த குமாரானு கேட்கக்கூடாது!
//மிகவும் உண்மை. வெளியுலகில் நாம் காணும் பாசாங்குக்கு சற்றும் குறைந்ததில்லை இங்கே உலவும் மக்களுடையது என்பது எனக்கும் கொஞ்சம் தாமதமாகத்தான் புரிந்தது.//
ஒரேப்படகில் பயணம் செய்கிறோம்!
//இது ரொம்பவும் விரக்தியான சொல். முழுக்க கட்டற்ற சுதந்திரம் எந்நாளும் வரும் என்று நான் நம்பவில்லை.//
இது விரக்தியால் அல்ல, அப்படி சுதந்திரம் கேட்பவர்கள் அவர்கள் அளவிலாவது சுதந்திரமாக இருக்கட்டுமே என்று கேட்க வந்தேன்! அப்போ தான் நான் இப்படி இருக்கேன் நீங்க எப்படினு கேட்கலாம், அது இல்லாமல் நான் கதவை மூடிப்பேன் நீ கதவை திறந்து வைனு சொல்ல கூடாதுல! :-))
------------------
ம.சிவா,
//மூன்று வருடமாக வலை பதியும் வவ்வால் புதுமுகம் என்றால் மூன்று மாதமாக வலை பதியும் நாமெல்லாம் எங்க!?!?!//
இரண்டு வருசம் வலைப்பதிவு , அதற்கு முன்னர் ஒரு வருசம் படிப்பு , மொத்தம் 3 வருசம், என்று தான் சொல்ல வந்தேன்!
நீங்க 3 மாசமா, நம்ப முடியவில்லையே? வயசை குறைத்து சொல்லும் ஆசையா( வலைப்பதிவில்)
கண்டிப்பா நல்ல நண்பர்கள் கிடைத்துள்ளார்கள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை!
//ஹரிஹரன் சொன்ன குறைகளெல்லாம் தமிழ்மணத்தின் குறைகள் என்று எப்படி சொல்கிறார் என்று தெரியவில்லை.//
உமையணன்(உமைக்கு அண்ணன் = கண்ணன்),
தன்னால் திரட்டப்பட்ட பதிவுகளில் சிறந்தவற்றைப் பூங்கா என்று தமிழ்மணம் தொகுத்து வழங்கிய தொகுப்பில் இடம்பெற்ற பெரும்பான்மையான பதிவுகளின் மையக்கருத்து "பிராமணர்களை வசைபாடும், இந்திய தேசியத்தை எதிர்க்கும், இந்துமத இழிப்பு, ஈழப்புலிகள், கம்யூனிச ஆதரவுக்குரல்களை பிரதிபலிக்கும் பதிவுகள் பிரதானமாக இடம் பெறுவதை காண முடிந்தது"
தமிழ்வலைப்பதிவுகளைத் திரட்டும் இதர திரட்டிகளான தேன்கூடு, தமிழ்வெளி,தமிழ்பாரதி, தமிழ்வலைப்பதிவுகள் போன்றவை தமிழ்மணம் போல் நிர்வாகக்குழுவினருக்கு உகந்த கருத்துள்ள பதிவுகளைத் தொகுத்து வாராந்திரப் பத்திரிக்கை வடிவில் தரவில்லை.
தமிழ்மணம் மட்டுமே தனக்கு உகந்த பதிவுகளை பூங்கா என்று தொகுத்து வழங்கியதால் தமிழ்மணத்தின் குறையாகக் காணவேண்டிதாகிறது.
மற்றபடிக்கு பொதுவாக தமிழ் வலையுலகத்தின் வாயிலாக தீவிர மாற்றுக் கருத்துக்களை அறிய முடிந்தது.
என்னளவில் "தெரிந்து தெளிதல்" என்பதற்கு உதவிகரமான களமாக குறிப்பிட்ட அளவுக்கு தமிழ்வலையுலகம் உதவியது.
பதிவு எழுதுவதைக் கொஞ்சம் நிறுத்தி விட்டு எல்லாவற்றையும் படிக்க வேண்டும் என்கிற என் ஆசை அடுத்த வாரம் நிறைவேற இருக்கிறது. அதன் பிறகு தான் இந்தப் பதிவுக்குப் பின்னூட்டம் எழுதும் அடிப்படை தகுதியைப் பெறுவேன் என்று நினைக்கிறேன்.
இப்போதைக்கு மேலோட்டமான பார்வையில்
// நடைமுறையில் என்ன செய்வார்களோ அதையே தான் இணையத்திலும் செய்கிறார்கள், எனவே புதுமை, புரட்சிலாம் இங்கே இல்லை என்பதே நிதர்சனம்!//
//ஒரு மாற்றுக்கருத்தை காது கொடுத்து கேட்க கூட துணிவற்ற மக்கள் தான் இங்கே இருக்காங்க, எனவே கட்டற்ற சுதந்திரம் வர எல்லாம் இன்னும் காலம் ஆகும்!//
என்கிற வவ்வாலின் கருத்துக்களுக்கு என் எண்ணங்கள் ஒத்துப் போகின்றன.
@வவ்வால்
//
நீங்க 3 மாசமா, நம்ப முடியவில்லையே? வயசை குறைத்து சொல்லும் ஆசையா( வலைப்பதிவில்)
//
நெசமாத்தாங்க!!
//
கண்டிப்பா நல்ல நண்பர்கள் கிடைத்துள்ளார்கள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை!
//
ஆமாம்.
வவ்வால், :-)) பரஸ்பரம் புரிந்துகொண்டதுக்கு நன்றி.
ஹரிஹரன்://என்னளவில் "தெரிந்து தெளிதல்" என்பதற்கு உதவிகரமான களமாக குறிப்பிட்ட அளவுக்கு தமிழ்வலையுலகம் உதவியது.//
ஹும்! :( இங்க நீங்க எழுதுன கால்பக்க மேட்டரைப் படிச்சதில நான் தெரிஞ்சுக்கிட்டது: 'உங்களுக்கு தெரிஞ்ச மாதிரியும் தெரியலை தெளிஞ்ச மாதிரியும் தெரியலே.' என்னமோ போங்க!
உங்களுக்காக எங்கூரு பாக்கியராஜ் பாணியில் ஒரு கதை:
ஆடு ஓடையில் நீர் குடித்தது.
ஓநாய் நான் குடிக்கும் தண்ணீரை ஏன் கலக்குகிறாய் என்றது.
ஆடு மிக சாந்தமாக நான் குடிக்கும் இடம் நீ குடித்தபிறகு வரும் கீழ் ஒடை தானே, அப்படியானால் நான் எப்படி கலக்கமுடியும் என்றது!
நீ கலக்க வில்ல என்றால் உன் அப்பன் பாட்டன் கலக்கி இருப்பான் என்று சொல்லி சண்டை போட்டது ஓநாய்.
(சொந்தமா தட்டுனதில்ல, சுட்டது. தட்டினார் வாழ்க.)
kasi,
Thanks for the visit !
//ஆடு ஓடையில் நீர் குடித்தது.
ஓநாய் நான் குடிக்கும் தண்ணீரை ஏன் கலக்குகிறாய் என்றது.
ஆடு மிக சாந்தமாக நான் குடிக்கும் இடம் நீ குடித்தபிறகு வரும் கீழ் ஒடை தானே, அப்படியானால் நான் எப்படி கலக்கமுடியும் என்றது!
நீ கலக்க வில்ல என்றால் உன் அப்பன் பாட்டன் கலக்கி இருப்பான் என்று சொல்லி சண்டை போட்டது ஓநாய்.
//
Not clear ! Can you explain a bit more for a tubelight like me ???? :-)
பாலா,
உங்களுக்குப் புரியவில்லை என்பதை நான் நம்பித்தானே ஆகவேண்டும். நம்பிவிட்டால் போகிறது:-))
இதைப் புரியாதவர்களுக்கு விளக்கிப் புரியவைக்கமுடியும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. 'புரியாத மாதிரி பேசுபவ'னாக வேண்டுமானால் இருந்துவிட்டுப் போகிறேன். (உங்களுக்கும் என்றாவது ஒரு நாள் புரியலாம் -ப்லாக்ரோலில் கலர்கோட் புரிந்தது போல- புரிந்தவர்களுக்கு நன்றி)
kasi,
//பாலா,
உங்களுக்குப் புரியவில்லை என்பதை நான் நம்பித்தானே ஆகவேண்டும். நம்பிவிட்டால் போகிறது:-))
//
:))))))
//மிகவும் உண்மை. வெளியுலகில் நாம் காணும் பாசாங்குக்கு சற்றும் குறைந்ததில்லை இங்கே உலவும் மக்களுடையது என்பது எனக்கும் கொஞ்சம் தாமதமாகத்தான் புரிந்தது.//
ஆமா....தெரியாமத்தான் கேக்கறேன்....
எல்லாரும் ஒரே பூமண்டலத்து மக்கள்தானே?
வேற கிரகத்துலே இருந்து வந்துட்டாங்களா என்ன?
அப்படித்தான் இருக்காங்க. அப்படித்தான் இருந்து ஆகணும்.
அப்படியேதான் இருப்பாங்க.
இதெல்லாம் பூமியில் மானிடர் வகைதான்:-))))))
ரொம்பக் கண்டுக்காம கிடைச்ச வாழ்க்கையை நல்லமுறையில் பயன்படுத்தலாம்:-)))))
//
ரொம்பக் கண்டுக்காம கிடைச்ச வாழ்க்கையை நல்லமுறையில் பயன்படுத்தலாம்:-)))))//
துளசி கோபால்,
நல்ல முறையில் என்றால் , நான், எனது குடும்பம், தனது உறவினர் தனது ஜாதி, தனது மதம் என்ற அடிப்படையில் "நல்ல முறையில்" பயன்படுத்துவதா :-))
//எல்லாரும் ஒரே பூமண்டலத்து மக்கள்தானே?
//
எல்லாம் ஒரே பூமண்டலம் தானே , அப்புறம் ஏன் ஏழை , பணக்காரன், தாழ்ந்தவன், உயர்ந்தவன் எல்லாம் பூமண்டலத்து மக்கள் யார் என்ன பண்ணா என்னனு பரந்த மனச விட வேண்டாமா?
அமெரிக்காவில் வசிப்பவர் மனைவியை வரதச்சிணைக்காக ஓடும் காரில் இருந்து தள்ளியதைக்கேள்விப்பட்டவர்கல் , அமெரிக்கா போனப்பிறௌம் வரதட்சிணை கொடுமையானு கேட்டாங்க(அமெரிக்க மாப்பிள்ளை வரதட்சிணைக்கேட்பது சகஜமென்றாலும்)
அதே போல தான் இணையவழி உரையாடுபவர்களும் சராசரிக்கு மேல் இருப்பாங்கனு ஒரு நப்பாசை இருக்க தானே செய்யுது, அது இல்லைனு லேட்டா தான் தெரியுது, அதான் காசி சொல்லி இருக்காங்க!
நீங்க சொன்னாப்போல இருக்கணும்னு தான் ஆசை. யாரும் அப்படி இல்லை, எல்லாம் இப்பூலோக மாந்தர்கள், எதாவது செய்தாலும் செய்யட்டும் , "பகைவனுக்கும் அருள்செய்வாய் நன்னஞ்சே" என்று இருக்க முயலுங்கள், நாங்களும் உங்களைப்பார்த்து கத்துக்கிடுறோம் :-))
Added Aruna Srinivasan's views in the posting !
Thanks Aruna :)
Thulasi, vavvAl,
nanni :)
ரத்னேஷ், சிறில் அலெக்ஸ், மங்களூர் சிவா, Hariharan,
வாசிப்புக்கும் கருத்துக்கும் நன்றி !
இந்த இடுகையையும் பின்னூட்டங்களையும் படிச்சு நிறைய தெரிஞ்சுக்கிட்டேன் பாலா.
Post a Comment